குண்டு பல்ப் vs ஃபோபுஸ் (Phoebus Cartel)

கலிஃபோர்னியாவில் லிவ்மோர் என்னுமிடத்தில் (Livemore, California) 2011ம் ஆண்டு யூன் மாதம் 18ம் திகதி ஒரு பிறந்த தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. விசேஷமாக அமைந்த 110வது ஆண்டு பிறந்த தினக் கொண்டாட்டம் அது. அந்தப் பிறந்த தினத்துக்கு உரியவர் யார் எனக் கேட்டால், மிகவும் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். அத்துடன் வாயடைத்தும் போவீர்கள். பிறந்த தினம் வேறு யாருக்கும் அல்ல, ஒரு சாதாரண மின்விளக்குக்குத்தான். நாம் ‘குண்டு பல்ப்’ என்று சொல்லும் ஒரு மின்விளக்கு அது. ஒரு சாதாரண குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பதால், அதற்கு இந்தப் பிறந்த தின விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

“ஒரு குண்டு பல்ப் நூற்றுப்பத்து ஆண்டுகள் எரிந்ததா?” என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வீடுகளில் பாவனையில் இருக்கும் குண்டு பல்புகள் எல்லாம் சில மாதங்களிலேயே பழுதடைந்து போவதுதான், நாம் இதுவரை கண்டு வந்த உண்மை. அதிக பட்சம் ஒரு வருடம் பாவித்தாலே அது பெரிய விசயம். ஆனால் இந்த லிவ்மோர் மின்விளக்கு மட்டும் எப்படி நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்திருக்க முடியும்? அந்தக் குண்டு பல்ப் நூற்றுப்பத்து வருடங்கள் எரிந்தது என்பது மட்டுமில்லாமல், ஒருநாளும் அணைக்கப்படாமல் தொடர்ச்சியாக எரிந்திருக்கின்றது. அதுதான் யாரும் நினைக்கவே முடியாத ஆச்சரியம்.

அமெரிக்கா, ஓஹையோவில் (Ohio) அமைந்த, ‘ஷெல்பி எலெக்ட்ரிக் கம்பெனியால்’ (Shelby Electric Company) 1895 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த மின்விளக்கு. 1991 இல் லிவ்மோரில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தில் அது பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட அந்தக் கணத்திலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டே இருக்கிறது. இடையில் ஒருமுறை மட்டும், அந்த தீயணைப்பு நிலையம் திருத்தியமைக்கப்பட்ட போது, ஒரு வார காலம் அது எரியவில்லை. ஒரு மின்விளக்கு இவ்வளவு காலம் எரிவது சாத்தியமா? என்பதை ஆராய்ந்து பார்த்தால் நமக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்துமே சுவாரஸ்யமானவை. உலகில் உள்ள மக்கள் அனைவரும் குறித்த சில நபர்களிடம் எப்படி எமாந்தோம் என்னும் தகவல்கலைச் சுமந்த சுவாரஷ்யம் அது.

கலிஃபோர்னியா குண்டு பல்ப் நூற்றுப் பத்து வருடங்கள் தாண்டியும் எரிந்து கொண்டிருப்பது தற்செயலாக இருக்குமோ என்று பார்த்தால், இல்லை என்ற பதிலே நமக்குக் கிடைக்கிறது. ‘ஷெல்பி’ கம்பெனியால் உருவாக்கப்பட்ட அந்த ஒரு மின்விளக்கு மட்டுமல்ல, அனைத்து மின்விளக்குகளுமே நூறு ஆண்டுகள் தாண்டியும், பழுதடையாமல் பாவிக்கக் கூடியதாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன என்னும் தகவல் நமக்குக் கிடைக்கின்றது.

நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மின்விளக்குகள் நீண்ட காலம் பாவிக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் விஞ்ஞானத்தில் எட்ட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட இன்றைய நிலையில், ஏன் குண்டு பல்புகள் சில மாதங்களிலேயே பழுதடைகின்றன? அப்போதே நூறு ஆண்டுகள் பாவிக்கும்படி மின்விளக்குகளை உருவாக்கலாம் என்றால், இப்போது அதைவிட அதிக காலம் பாவிக்கும் படியாக அல்லவா உற்பத்தி செய்ய வேண்டும்? விஞ்ஞானம் எப்போதும் முன்னோக்கி நகருமேயல்லாமல், பின்னோக்கி நகர முடியாதே! இப்படியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிர்ச்சி தரும் பதிலை ஒன்றைப் போட்டு உடைத்தார் ஹெல்முட் ஹோகெ (Helmut Hoege) என்பவர். ஹெல்முட் ஹோகே ஒரு ஜெர்மனிய வரலாற்று ஆய்வாளர். 1982 இல் இவர் பேர்லினில் கண்டெடுத்த கோப்புகள் மூலமாக, மறைந்திருந்த மிகப்பெரிய உண்மைகள் வெளியே வந்தன.

ஃபோபுஸ் (Phoebus Cartel)

1924 ம் ஆண்டு டிசம்பர் 23 ம் திகதி ஜெனீவாவில் இரகசியமாக ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கோர்ட், டை அணிந்த கணவான்கள் அந்தக் கூட்டமைப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருமே பணக்காரப் பெருமுதலாளிகள். உலகில் உள்ள மின்விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்புக்கு ‘ஃபோபுஸ்’ (Phoebus Cartel) என்று பெயரிடப்பட்டது. அந்தக் கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.

“உலகில் மின்விளக்குகளைத் தயாரிக்கும் அனைத்துக் கம்பெனிகளும், மின்விளக்குகளின் பாவனைக் காலங்கள் பற்றி எந்தவிதக் கவனமுமில்லாமல் செயல்படுகின்றனர். அதிக காலம் பாவிக்கும் மின்விளக்குகளால் கம்பெனிகளுக்கு நஷ்டமே ஏற்படுகின்றன. இதுவரை நீண்ட காலம் எரியக் கூடிய மின்விளக்குகளைத் தயாரித்த அனைத்து கம்பெனிகளும், இனி மின்விளக்குகளின் பாவனைக் காலத்தை 1000 மணித்தியாளங்களாகக் குறைக்க வேண்டும்“.

இந்தத் தீர்மானம் அந்தக் கூட்டமைப்பில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் மின்விளக்குத் தயாரிப்பின் ஜாம்பவான்களான, ஹாலந்தின் பிலிப்ஸ், ஜேர்மனியின் ஒஸ்ராம், பிரான்ஸின் லாம்ப் கம்பெனி என, அனைத்துக் கம்பெனிகளும் கையெழுத்திட்டுள்ளனர். அதாவது இதுவரை தரமாக இருந்த ஒரு பொருளை, மிகவும் மோசமான தரத்தில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டமைப்பு எடுத்த முடிவு. அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் உள்ள அனைத்துக் கம்பெனிகளும் இந்த கூட்டமைப்பின் ஒப்பந்தத்திற்கு பணிய வேண்டும். இதில் உள்ள நகைச்சுவை என்னவென்றால், இந்த கூட்டமைப்பின் சட்டத்தை மீறும் கம்பெனிகள் அபராதம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனை உருவாக்கப்பட்டதுதான். அதுபோல அபராதப் பணமும் பல கம்பெனிகளிடமிருந்து பெறவிடப்பட்டிருக்கின்றன.

1000 மணித்தியாளங்கள் என்பது மிகவும் குறைந்த பாவனைக் காலம். இரவுகளில் மட்டும் மின்விளக்குகளைப் பாவித்தாலும், ஒரு வருடத்திற்குள் பழுதடைந்து விடும் காலம். முதலாளிகளின் தனிப்பட்ட இலாபத்தை மட்டும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் இது. இந்த ஃபோபுஸ் கூட்டமைப்பின் ஒப்பந்தம் மூலம், உலகம் முழுவதும் உள்ள மக்கள், பழுதடைய வேண்டும் என்றே தயாரிக்கப்பட்ட மின் விளக்குகளையே இப்போதும் பாவித்து வருகின்றனர். வளர்ந்த விஞ்ஞானம் மக்களுக்கு எதிரான ஒரு பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் கொடுமை இது. உலகப் பெருமுதலாளிகளிடம் நாம் ஏமாந்த கதை இது.

Source:
கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்.
-ராஜ் சிவா, வின் கட்டுரையுன் ஒரு பகுதி.
http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=5815

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s